2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராலிங்கம். ரங்கூன், இவன் தந்திரம், ஹர ஹர மகாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமவுலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிம்புவின் பத்து தல, 16 ஆகஸ்ட் 1947 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இவர்களின் திருமணத்தில் நடிகர் விக்ரம் பிரபு நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இதேபோல் இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.