குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற நிலையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக இருக்கின்றன.

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த ஒன்று மற்றும் ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் குஜராத்தில் மொத்த 182 இடங்கள். இதில் பாஜக 117 முதல் 148 இடங்கள் வரைக்கும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளன என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதேபோல் காங்கிரஸ் 30 இடங்களில் இருந்து 51 இடங்கள் வரைக்கும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஆம் ஆத்மி’ கட்சி இரண்டு இடங்களில் இருந்து 13 இடங்கள் வரைக்கும் பெற வாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜகவுக்கு 32 தொகுதி முதல் 40 தொகுதி வரைக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் முதல் 34 இடங்கள் வரைக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய தனியார் தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
