குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைந்துள்ளது. பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 26ஆம் தேதி தொங்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்த நிலையில், பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தார்கள். இதுவரை குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) October 31, 2022