நேற்று நடந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆசிய கிரிக்கெட் போட்டியை பற்றித்தான் இன்று இந்தியா முழுவதும் பேசி வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை T20 போட்டியில் பாகிஸ்தானிடம் பலத்த அடி வாங்கிய இந்திய அணி நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்து கொண்டது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இறுதியில் ஒருவழியாக 147 ரன்களை எட்டினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்