ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமித்தும் சட்டப்பேரவையில் அதை அங்கீகரிக்காத சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளார் அதிமுகவினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்து எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த போலீசார் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொடுக்கக் கூடாது என்று தடுத்தார்கள். இதனால் ஆவேசமடைந்த பழனிச்சாமி, பேட்டியை பாதியில் நிறுத்திவிட்டு ஆவேசமாக எழுந்து நின்று, ஏய்..நிருபர்கள் இருக்காங்க..ஏம்பா கம்முனு இரு.. என்று ஆவேச பாய்ச்சலை காட்டினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்த ஆதரவாளர்களும் கூச்சல் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.