உளுந்தூர்பேட்டை அருகே கலவை இயந்திரத்துடன் சென்ற டிராக்டர் டிப்பர் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர் மேலும் காயம் அடைந்த கல்வித்துறை அதிகாரி உட்பட ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 6 பேர் கூலி வேலைக்கு செங்குறிச்சி கிராமத்திற்கு சென்றனர் இவர்கள் வேலை முடித்து அதே வாகனத்தில் திரும்ப வீட்டிற்கு செல்லும் வழியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் அதே திசையில் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து டிராக்டர் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கலவை இயந்திரம் மற்றும் டிராக்டர் முற்றிலும் உருகுளைந்த நிலையில் அப்பளம் போல் நொறுங்கியது மேலும் அதில் பயணம் செய்த திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் 25, நாவலேரிஅம்மாள் 45 இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் டிராக்டரில் வந்த வெற்றிவேல், நாகராஜ், ரேவதி 35 மகேஸ்வரி, பஸ்ஸில் பயணம் செய்த மாவட்ட கல்வி ஆய்வாளர் சரவணன், சுப்பிரமணி, கார்த்தி, முத்து உட்பட 7பேர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் போலீசார் மாற்று பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.