மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் இயல்பான நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் , மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சீதா ராமம்.
கதை சுருக்கம் :
நாட்டுப்பற்றை மையமாக கொண்ட ஒரு காதல் கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவப்புடி. இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ராம் ( துல்கர் சல்மான் ) காஷ்மீரில் நடைபெற இருந்த இந்து, முஸ்லீம் கலவரத்தை தடுத்து நிறுத்துகிறார். இதனால் நாடு முழுவதும் துல்கர் சல்மான் கொண்டாடப்படும் போது தனக்காக யாருமே இல்லை என்பதை ஒரு பேட்டியில் தெரிவிப்பார் ராம்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து அவருக்கு பாராட்டு கடிதங்கள் வரும். அப்போது சீதா என்ற பெண் துல்கர் சல்மானுக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து முகவரி இல்லாத சீதாவின் மீது காதல் வயப்படும் ராம் அவரை தேடி செல்வார்.

இருவருக்கும் காதல் மலரும் ஆனால் உண்மையில் அந்த பெண் சீதாவே கிடையாது. சீதாவின் உண்மையான பெயர் இளவரசி நூர் ஜஹான். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஃப்ரீன் என்ற கதாபாத்திரம் ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வார். ராம் எழுதிய காதல் கடிதத்தை சீதாவிடம் கொடுத்தாரா அஃப்ரீன். ராமுக்கு என்ன ஆனது, ராம் சீதா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் சீதா ராமம் படத்தின் மீதி கதை.
துல்கர் சல்மான் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் சிறப்பாக தேர்வு செய்து அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதே போல இந்த படத்திலும் காதல் காட்சிகள் நாட்டுப்பற்று என தன்னுடைய ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை நல்ல முறையில் ரசிக்க செய்துள்ளார்.

நாயகியாக வரும் மிருணாள் தாகூர், சீதா கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளனர். ஆரம்பம் முதல் இறுதிவரை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
பி எஸ் வினோத் மற்றும் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரின் அழகு மற்றும் பாடல்களில் வரும் இடங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பின்னனி இசை மற்றும் பாடல்கள் ரசிக்க செய்துள்ளது.
ஆக மொத்தம் காதல் கலந்த நாட்டுப்பற்று படமாக அனைவரும் பாரட்டை பெறும் படமாக சீதா ராமம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.