தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் என்ற தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் ‘சரவணன் அருள்’ சிறுவயதில் இருந்தே சினிமா மீது அதீத அன்பு கொண்ட இவர் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளார் .
‘சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கதையின் கரு:
பிரபல விஞ்ஞானியாக வலம் வரும் சரவணனின் உயிர் நண்பனின் குடும்பம், சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு இன்சுலின் செலுத்திக்கொண்டு வாழ்க்கையை துயருடன் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் திடீரென்று நண்பன் உயிரிழந்து விட, அது சரவணனை பெரிதும் பாதிக்கிறது.
இந்த பாதிப்பு அவரை சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட செய்கிறது. இந்த ஆராய்ச்சியில் அவர் சந்தித்த பிரச்னைகள், இறுதியில் அவர் அந்த மருந்தை கண்டுபிடித்தாரா இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை.
முதல் படத்திலேயே பிரமாண்டம் காட்டவேண்டும் என்ற முனைப்பில் பல கோடிகள் செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு விஷயம், நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல நிச்சயம் எல்லா இடங்களிலும் மோசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை. முடிந்த அளவு நன்றாக முயற்சித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மிடுக்கு முகத்துடன் அட்டகாசம் செய்யும் சரவணன், காதல் காட்சிகளில் ரசிக்க வைப்பதற்கு பதிலாக சிரிக்க வைக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை, ஜேடி ஜெர்ரி இயக்குநர்களின் கலர்ஃபுல்லான மேக்கிங், ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு சில இடங்களில் செய்யும் காமெடி, நல்ல மெசேஜ் உள்ளிட்ட பல முக்கிய காட்சிகள் இந்த படத்திற்கு நல்ல பேரை கொடுத்துள்ளது . யாஷிகா ஆனந்த் உடன் ஆடும் மொசலு மொசலு பாடல் மற்றும் ராய் லக்ஷ்மியுடன் நடனமாடும் வாடி வாசல் வாடி பாடல்களும் இளசுகளை கவர்ந்துள்ளது .

லெஜண்ட் சரவணனின் முதல் படம் என்பதால், பல இடங்களில் அவரது பேச்சும், நடிப்பும் படத்தோடு ஒட்டவில்லை என்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது . திரைக்கதையில் சில ட்விஸ்ட்களுடன் இயக்குநர்கள் எழுதி இருந்தால், தி லெஜண்ட் திரைப்படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
ஆகா மொத்தம் தி லெஜண்ட் ஒரு நல்ல முயற்சி…..