தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி வெழுத்து வாங்குகிறது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பருவமழை நீடிக்கும். இந்த மழைக்காலம் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது, இது நம் கூந்தலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் முடி கொட்டுவது, பொடுகு, நரை என பல பிரச்சனைகள் நம்மிடம் பர்மிசன் கேட்காமல் வந்துவிடுகின்றன . இதில் பொடுகு வந்தால் கூடவே முகப்பருக்கள் இலவசமாக வரக்கூடும். ஆரம்பத்தில் நீங்கள் சரியான பராமரிப்பு செய்து கொண்டால், மழைக்காலத்தை மகிழ்ச்சியாக கடக்கலாம்.
மழைக்காலத்தில் கூந்தல் உதிர்வதைக் குறைக்கவும், அழகாக வைத்திருக்கவும் சில குறிப்புகள் :
எண்ணெய்பசை பிரச்னை:
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் எப்போதும் காணப்படுவதால் கூந்தல் வலுவிழந்து இருக்கும். ஈரப்பதத்துடன் எண்ணெய் பசையும் சேர்ந்து கொண்டால் கூந்தலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே , கூந்தலை வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டு அலசலாம்.

எண்ணெய் பசை கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அது அதிக வறட்சியை ஏற்படுத்தாது. அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய், பாசிப்பயறு மாவு, அரப்பு போன்ற இயற்கை பொருட்களை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது.
பூஞ்சைத் தொற்று:

எல்லா காலத்திலும் கூந்தலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள பூஞ்சைத் தொற்று வராமல் தவிர்ப்பது அவசியமாகும். குறிப்பாக மழைக்காலத்தில் தொற்று வேகமாக பரவிவிடும். இதற்கென்று இருக்கும் சில லோஷன்களை மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.
என்ன சாப்பிடலாம்:
ஒமேகா 3, புரோபயாடிக்குகள், ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள், இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நெல்லிக்காய், கறிவேப்பிலை, ஆரஞ்சு போன்றவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அதை அதிகம் உண்ணலாம்.
எதை தவிர்க்கலாம்:

உடனே தலைமுடி காய வேண்டும், என அடிக்கடி ஹேர் ட்ரையரை பயன்படுத்தக் கூடாது. இது முடியின் வேர்வரை பாதிப்பை ஏற்படுத்தும். முடியை வெப்பப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இது போன்ற கருவிகள் முடி சார்ந்த பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த காலத்தில் இருப்பது போல் தேவைப்பட்டால் சாமிராணி புகை போடலாம். இது கூந்தலில் தொற்று ஏற்படுவதையும் தவிர்க்கும்.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்கவேண்டும். ஏனெனில் இவை கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். ஹென்னாவும் அதிக குளிர்ச்சியை தரும் என்பதால் அதிக நேரம் வைக்காமல் விரைவில் கழுவி விட வேண்டும்.