இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் திக்கி திணறி வருகின்றனர் . இந்த இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என அந்நாட்டு அதிபர் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத அந்நாட்டு அரசை கண்டித்து கடந்த சில மாதங்களாக அந்த அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

பிற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத இக்கட்டான சூழலால் , உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இன்று வரை , மக்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படவில்லை. புதிய அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கேவையும் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இலங்கைக்கு தேவையான எரிபொருள், உரம், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை நட்பு நாடான இந்தியா வழங்கி உதவிக்கரம் நீட்டியது. இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று பேசும்போது, நமது நெருங்கிய நட்பு நாடான இந்தியா, நம்முடைய பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கியது என தனிப்பட்ட முறையில் குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு தேவையான உதவிகளை தக்க சமயத்தில் வழங்கி வருகிறது . என்னுடைய மக்கள் சார்பாகவும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.