குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அப்போது சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தின் முன் ஆட்டோ மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
முன்னதாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சீருடை, பேட்ஜ் மற்றும் ஸ்சூ ஆகியவற்றை முறையாக அணிந்து இருக்கிறார்களா? என்று பார்வையிட்டார். முறையாக அணியாதவர்களை எச்சரிக்கை செய்து அவர்களின் பெயர்களை எழுதி வைத்துக்கொண்டார் அப்போது போலீசார் உடல் கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவர் பார்வையிட்டார்.