இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் ஜடேஜா. நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியாவுடன் உறுதுணையாக இருந்தார் ஜடேஜா.
இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் ஜடேஜாவை இந்திய முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான மஞ்சரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது ஜடேஜாவிடம் மஞ்சரேக்கர் பேசியது தற்போது சமூகத்தளங்களில் செம வைரலாகியது.
ஏனென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலககோப்பையின் போது சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜாவின் ஆட்டத்தை பற்றி விமர்சித்தார். அது இருவருக்குள்ளும் பிரச்சனை ஆனது. சமூகத்தளங்களில் பலரும் சஞ்சய் மஞ்சரேக்கரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அதன் பிறகு இருவரும் நேற்று நேருக்கு நேர் சந்தித்து பேசும் தருணம் ஏற்பட்டது. அப்போது தொகுப்பாளராக இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜாவை பேட்டி கண்டார். பேட்டி எடுக்கும் முன்பு சஞ்சய் ஜடேஜாவிடம், முதலில் நீங்கள் என்னுடன் பேசுவதற்கு தயாரா? என்று மஞ்ச்ரேக்கர் கேள்வி எழுப்ப, ஜடேஜா “எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை நீங்கள் கேட்கலாம்” எனத் தெரிவித்தார்.
அதன்பிறகு போட்டியைப் பற்றி பேசிய ஜடேஜா, “ஹர்திக் பாண்டியாவும் நானும் இறுதி வரை விளையாட விரும்பினோம். பாகிஸ்தான் மிகச் சிறந்த பந்துவீச்சைக் கொண்டிருந்தனர். அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசி நெருக்கடி கொடுத்தனர். நான் ஆட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் ஹர்திக் சிறப்பாக விளையாடினார். அவர் கடைசி வரை இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறினார்.