தமிழகத்தில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவ மழையானது தீவிரமடைந்துள்ளது.மேலும் காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்யும் என ரெட் அலார்ட் எச்சரிக்கைய விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அவ் அறிவிப்பின் படி அதிக கன மழை பெய்ய கூடும் என்பதினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி இன்று விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு கன மழை பெய்த நிலையில்,இன்று காலை முதல் மீண்டும் கன மழையானது பெய்ய துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழையானது பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியும்,பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 4.3செ.மீட்டரும், குறைந்தபட்சமாக 0.64 செ.மீட்டரும்,காஞ்சிபுரத்தில் 3.74 செ.மீட்டரும்,ஸ்ரீபெரும்புதூரில் 2.92செ.மீட்டரும்,உத்திரமேரூரில் 2.7செ.மீட்டரும்,செம்பரம்பாக்கத்தில் 3.12 செ.மீட்டரும் என மாவட்டத்தில் மொத்தம் 17.42செ.மீ மழையானது கொட்டித் தீர்த்துள்ளது.சராசரியாக 2.9செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 71 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 ஏரிகள் 75%-99% , 235 ஏரிகள் 50%-75%, 280 ஏரிகள் 25%-50%, 247 ஏரிகள் 25% கீழ் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்திறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் மீண்டும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தொடர்ந்து கன மழை பெய்ய துவங்கியதால் வரும் நாட்களில் கணிசமான ஏரிகள் முழு கொள்ளவை எட்டி விட வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் தொடர்ந்து 24மணி நேரமும் அனைத்து ஏரிகளின் பாதுகாப்பினை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட அதனை உடனடியாக சரி செய்திடவும் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.