இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கார்கில்லில் நடைபெற்ற பயங்கர போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான ( ஜூலை 26 ) நாடு முழுவதும் கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1999ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியை பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டது.
இதனால் 1999ம் ஆண்டு மே 9ம் தேதி கார்கில் போர் தொடங்கியது. கார்கிலைப் பாதுகாக்க இந்திய சிறப்புப் படைகளுடன் கிட்டத்தட்ட 30,000 துருப்புக்கள் கார்கில் பகுதிக்கு உடனடியாக அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானின் இருந்த சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது .

ஜூலை 26, 1999 வரை சுமார் இரண்டரை மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதோடு, பாகிஸ்தான் ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டது. இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

கார்கில் மலையைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் கெய்ஷிங் கிளிஃபோர்ட் நோங்ரம் ஆகிய வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா மற்றும் மகாவீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இதேபோல் ஜூலை 26ம் தேதியான இன்றும் நாடு முழுவதும் கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கார்கில் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினார்.