நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 238 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, தென்னாப்பிரிக்க அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதில் சற்று குளறுபடி ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.அதாவது ஆட்ட நாயகன் விருதை சூர்யகுமார் யாதவுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்த்த போதும், கே.எல்.ராகுலுக்கு வழங்கி அதிர்ச்சி தந்தனர். அதிக ஸ்கோர் அடித்த வீரர், அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் அல்லது இரண்டிலுமே சிறப்பாக இருந்தவர்களுக்கு தான் இந்த விருது வழங்கப்படும்.
அப்படி பார்த்தால் நேற்று சூர்யகுமார் யாதவ் தான் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.சூரியகுமார் யாதவ் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 61 ரன்களை சேர்த்தார்.அதே சமயத்தில் கே.எல்.ராகுல் சூரியகுமார் யாதவை விட குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 57 ரன்களை மட்டுமே அடித்தார்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் விருது தரப்படவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.இந்நிலையில் இதுகுறித்து கே.எல்.ராகுலே வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், இந்த போட்டியில் எனக்கு 2 ஆச்சரியங்கள் உள்ளன. 180 ரன்கள் வரும் என கணக்கிட்ட போது 237 ரன்கள் வந்தது. மற்றொரு விஷயம் எனக்கு ஆட்ட நாயகன் விருது தந்தது தான்.

சூர்யகுமார் யாதவுக்கு தான் நியாயப்படி கொடுத்திருக்க வேண்டும். அவர் தான் ஆட்டத்தையே மாற்றி அமைத்தார். மிடில் ஆர்டரில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த விருதுக்கு அவர் தான் தகுதியானவர் என கே.எல்.ராகுல் பேசினார்.இதையடுத்து கடைசி போட்டி நாளை இந்தூரில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது