இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 தொடர் இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சண்டிகரில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வைஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேசுகையில், திறமைப்படி பார்த்தால் நாங்கள் 80 -85% தான் வெளிகாட்டியிருக்கிறோம். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும் சரியாக செயல்படவில்லை.
அதில் சில விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது. இதை எல்லாமே சரி செய்தால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு தொடரிலும் சரிசெய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்த தவறும், ஆசிய கோப்பையில் செய்த தவறும் வெவ்வேறு தான். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
அந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம். நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் அதை சரி செய்து விடுவோம்.ஓய்வறையில் ஒரு வீரருக்கு மிக முக்கியமான விஷயம் கேப்டன், கோச் உள்ளிட்டோர் நம்மை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது தான். அந்தவகையில் பார்த்தால் இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் தவறு செய்யும் உரிமை உண்டு.

தவறு செய்தால் இடம் போய்விடுமோ என்ற அச்சம் எங்களிடம் இல்லை. மாறாக தவறு செய்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என கே.எல்.ராகுல் கூறினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓப்பனிங்கில் கே.எல் ராகுல் திறன்பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது