இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அக்.15 அன்று நடைபெறவுள்ளது. சென்னை, ராயப்பேட்டை, புது கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. எனவே, இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இம்முகாமில் வருகைபுரியும் வேலை நாடுநர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கு பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது மற்றும் அயல்நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளன.