ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 10, 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு, அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறார். அதன்படி, சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இரு பள்ளிகளிலும் நடைபெற்ற விழாவில், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு கேடயத்தையும் வழங்கினார். முன்னதாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற ராமசாமி, ராம்ஸ் என்கிற ராமசாமி, பொருளாளர் கே.பி.எஸ்.மணி, அவைத்தலைவர் விஸ்வநாதன், ஈங்கூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, எஸ்.கே. கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் எஸ்.கே. செந்தில்குமார், ஆர்.கே.ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் பிரமோத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜமூர்த்தி, துணைத் தலைவர் ராசு, துடுப்பதி ஊராட்சி தலைவர் கவிதா அன்பரசு, முன்னாள் தலைவர் சிவன்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.