புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 கட்டணத்தில் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது இது பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகின்றது.
இந்நிலையில் கல்வித்துறை சார்பில் இயக்கி வந்த மாணவர்களுக்கான இலவச பேருந்ததை கல்வி துறை உடனடியாக இயக்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லூரியில் இருந்து உயர் கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று, அதன் வாயல் முன்பு கோஷங்களை எழுப்பி முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரை சந்தித்து மாணவர்கள் மனு அளித்தனர். இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவலையில் இருப்பதாகவும், விரைவாக மாணவர்களுக்கான 1 ரூபாய் கட்டண பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தனர்.