உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் சில வாரங்களாக அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்ய தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாகாணங்கள் இருளில் மூழ்கி விட்டன. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதாக நாட்டு அதிபர் ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். முக்கியமான 3 மின் நிலையங்கள் ரஷியாவின் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்துள்ளன. 40% மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

தலைநகர் கீவ்வில் பெரும் பகுதி மின்சாரம் இன்றி இருண்டு விட்டது. இருப்பினும் உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் இயங்கி வருகின்றனர். இதுபோன்று போர் நடைபெற்று வரும் சூழலில் இத்தகைய இடையூறுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று உக்ரைன் மக்கள் கூறுகின்றனர். ரஷ்ய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மின் நிலையங்களை புணரமைத்து மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகளை தீவிரப் படுத்தி இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனில் கடும் குளிர் நிலவுவதால் ஹீட்டர்களுக்கு பயன்படுத்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.