புதுச்சேரி அரசு யு.டி.சி. மற்றும் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல் பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்தி அமைச்சக ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளாமல் நேரடியாக காலி பணியிடம் நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதற்கு புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சக ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிக்கப்படுவதாக அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்றும், அப்படி மீறி போராட்டம் நடத்தினால் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து புதுச்சேரி சட்டமன்றம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சேஷாசலம் கூறும்போது….
அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அரசு ஊழியர்களை மிரட்டும் தொணியை அதிகாரிகள் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் முதலமைச்சர் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரித்தனர்.