கடந்த 23ஆம் தேதி சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் அருகே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஆத்தூர் முல்லைவாடி கிராமத்தில் இருந்து ஆம்னி வேன் ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் பேருந்து – ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் ஆத்துரை சேர்ந்த ராஜேஷ், சந்தியா ,சரண்யா, ரம்யா, சுகன்யா மற்றும் அவரது மகள் 11 வயதான தன்ஷிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் படுகாயம் அடைந்த ஐந்து பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் சென்னை நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். அத்துடன் இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து இயக்கி வந்த ஓட்டுநர் முத்துசாமி பெங்களூரில் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் கைது செய்யப்பட்டு சேலம் அழைத்து வரப்பட்ட அவரிடம், ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.