இந்தியாவின் இரும்பு மனிதர் என்று மக்களால் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 147வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது . குஜராத் மாநிலத்தை சேர்ந்த படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அத்துடன் சுதந்திரத்திற்குப் பிறகு 550க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணத்த பெருமைக்குரியவர். படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்தச் சிலை ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது உலக புகழ் பெற்ற சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

குஜராத்தில் ரூ. 8,000 கோடி மதிப்பிலான தண்ணீர் விநியோகம் தொடர்பான மற்றும் வறண்டு கிடக்கும் பகுதியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.