கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். மிகவும் சீரியஸான கதையை நகைச்சுவையாக கையாண்ட நெல்சனின் இயக்கம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதைத்தொடர்ந்து அதே ஜானரில் டாக்டர் படத்தை இயக்கி வெற்றிகண்டார் நெல்சன்.
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பதிவு செய்த நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் சற்று சறுக்கினார். இந்நிலையில் அந்த சறுக்கலில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் ஜெயிலர் படத்தை இயக்கி வருகின்றார் நெல்சன். விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவித்தது. இதனால் ‘ஜெயிலர்’ படத்தினை ஹிட்டாக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் நெல்சன். இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில், வீடியோக்கள் வரிசையாக லீக் ஆவதை போல் ‘ஜெயிலர்’ படத்திற்கும் அந்த நிலை வரக்கூடாது என படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனால் படப்பிடிப்பு தளத்திற்குள் யாருக்கும் செல்போன் அனுமதி இல்லை என்றும் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் வெளியாட்களின் மொபைல் கேமராக்களை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி விடலாம் என்றும் பிளான் போட்டுள்ளாராம் நெல்சன். இதனால் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் எதுவும் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. நெல்சன் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதும் புகைப்படங்கள் லீக்கானது குறிப்பிடத்தக்கது