விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்பி மாணிக்கம்தாகூர் *அண்ணாமலையைச் சந்திக்கும் போதெல்லாம் ஆன்லைன் ரம்மி மசோதாவில் கையெழுத்திடும் பேனாவை ஆளுநர் கீழே வைத்து விடுகிறார் என கூறினார்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் விருதுநகர் பாரளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
இக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. கல்விக்கடனில் மத்திய அரசின் மெத்தனம் தெரிகிறது. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 9 கோடியே 5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் வர உள்ள நிலையில் கல்விக் கடன் தேவை இலக்காக 143 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளருகின்ற மாவட்டம் என விருதுநகர் மாவட்டத்தை அறிவித்த மத்திய அரசின் மெத்தனத்தையே இது காட்டுகிறது.
விருதுநகர் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை தான் செய்ய உள்ளதாக ஒவ்வொரு முறையும் கூறிய நிர்மலா சீத்தாராமனின் திறமையின் மையை இது காட்டுகிறது. மாவட்டத்தில் கல்வி கடன் ரூ 145 கோடி இலக்கு வைத்திருந்த நிலையில் தற்போது 9 கோடியே 5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரூ 120 கோடி வரை வழங்கப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் 100 நாளும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் இலக்கு வைத்திருக்கிறார். இதில்
விருதுநகர் மாவட்டம் முதன்மையாக உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாதது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களின் விமர்சனம் குறித்த கேள்விக்கு : ஆன் லைன் ரம்மி -ஆளுநர் அண்ணாமலை இந்த மூன்றிற்கும் உள்ள இடைவெளியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் அண்ணாமலை ஆளுநரை சந்திக்கின்றாரோ அப்போதெல்லாம் ஆன்லைன் ரம்மி மசோதாவில் கையெழுத்திடும் பேனாவை ஆளுநர் கீழே வைத்து விடுகிறார். ஆன்லைன் ரம்மி குறித்த அண்ணாமலையின் பார்வையை சரி செய்ய வேண்டும், அண்ணாமலை ஆளுநருக்கு அழுத்தம் தருகிறாரா என்ற சந்தேகம் வருகிறது. ஆன்லைன் ரம்மி தமிழக மக்களுக்கு எதிரானது. பல குடும்பங்களை அழித்தது என சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் பேசின. ஆனால் பாஜக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த புள்ளியை கவனித்து சரி செய்ய வேண்டும். ஆன் லைன் ரம்மி -ஆளுநர் அண்ணாமலை மூன்று ஆவிற்கும் சம்மந்தம் இருக்கிறது என பார்க்க வேண்டும். ஆளுநரிடம் பா.ஜ.க சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து சொல்லி விட்டோம்.
தமிழக அரசு இதை சரியாக நடைமுறைப்படுத்தாமல் ஆளுநரை குற்றம் சொல்கிறது என அண்ணாமலை கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை சொல்வது எல்லாம் உண்மைக்கு புறம்பானது.அண்ணமலையைப் பொறுத்த வரையில் முன்னுக்கு பின்னாகவும் பொய்யையும் சொல்ல பழகியவர் அவரது பேச்சு பற்றி காயத்ரி ரகுராமிடம் தான் கேட்கனும்.
சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்.
அண்ணமலையைப் பொறுத்த வரையில் இதில் அரசியல் விளையாட்டும் வேறு தவறான விளையாட்டும் விளையாடுகிறார்.
அது தமிழகத்திற்கு எதிரானது. எப்போதும் பா.ஜ.க. தமிழக மக்களுக்கு எதிரானது என்பதை இவ் விஷயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.