அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ரஞ்சித். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் அதை ரஞ்சித் அணுகிய விதம் புதிதாக இருந்தது. அதன் காரணமாகவே இப்படம் மெகாஹிட்டானது.
அதைத்தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் அவரை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. கார்த்தியின் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரஞ்சித்தை பரபரப்பான இயக்குனராக மாற்றியது.
மெட்ராஸ் படத்தின் வெற்றி ரஞ்சித்திற்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை தொடர்ச்சியாக இயக்கினார் ரஞ்சித். இதையடுத்து கடந்தாண்டு ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் OTTயில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தினை தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது, ரஞ்சித் மீண்டும் புது ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என கூறியிருந்தார் வெற்றிமாறன்.
இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’படத்தின் சிறப்புக்காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் பார்துவிட்டு வெளியே வந்தததும், அனுராக் காஷ்யப் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து படம் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் பல திரையுலக பிரபலங்கள் ‘நட்சத்திரம் நகர்கிறது’படத்தினை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நாளை இப்படம் திரையில் வெளியாகவுள்ளது