ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜா (22) அவரது மனைவி சுவாதி (19) வசித்து வந்தார். இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தை நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால் குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சுவாதி தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் இருந்ததால், இன்று அதிகாலை சுவாதி கணவரிடம் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மீண்டும் தெரிவித்த போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் உயிருடன் இருந்தால்தானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என்று ஆத்திரமடைந்த முனி ராஜா, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து தரையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதை பார்த்த முனி ராஜா அங்கிருந்து பயந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சுவாதி கதறி அழுதபடி குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட சுவாதி அதிர்ச்சடைந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காளஹஸ்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஞ்சுயாதவ் வழக்கு பதிவு செய்து முனிராஜாவை கைது செய்தனர்.