தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். தமிழகம், கேரளாவில் தனது ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்த அவர், தற்போது கர்நாடகாவில் நடைபயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி எழுச்சி உரையாற்றினார். அப்போது, திடிரென கனமழை பெய்யத் தொடங்கிய போதும் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடி உரையாற்றிய அவர், மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்தான் தனது இந்திய ஒற்றுமை பயணம் என தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து காந்தி போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடி வருவதாகத் தெரிவித்தார். இந்த சித்தாந்தம் கடந்த 8 ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளதாக பாஜகவையும், ஆர்எஸ்எஸ்சையும் கடுமையாக சாடிய ராகுல் காந்தி, பாஜக அரசின் கொள்கைகளை வன்மையாக கண்டித்தார். கொட்டும் மழையில் நனைந்தபடி தான் பேசும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.