ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், வேதாளை, மண்டபம், தேவிபட்டினம், தொண்டி ஆகிய கடற்பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பதப்படுத்திய மற்றும் உயிர் கடல் அட்டைகள் டன் கணக்கில் இலங்கைக்கு மர்மப் படகுகளில் கடல் வழியாக கடத்தப்பட்டு வந்தது.
வனத்துறை, மெரைன், உள்ளூர் போலீசாரின் தீவிர கண்காணிப்பு மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கடல் அட்டை கடத்தல் தொடர்பாக இதுவரைப பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அழிக்கப்பட்டன. கடல் அட்டை மீன்பிடி மீதான தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடல் அட்டைகள் கடத்தல் தொடர்பான தகவல் படி, மண்டபம் வடக்கு கடற்பகுதியில் இன்று காலை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வழிபாட்டு தலம் அருகே குலாம் முகமது என்பவருக்கு சொந்தமான இடத்தில் உயிருடன் 800 கிலோ, வேக வைத்த நிலையில் 300 கிலோ என மூடை கட்டி பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கடல் அட்டைகளை வேக வைத்து பதப்படுத்த பயன்படுத்திய 5 காஸ் சிலிண்டர் , 3 அலுமினிய அண்டா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மீராசா மகன் நஜீப் என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த 1100 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை வசம் ஒப்படைத்து மேல் நடவடிக்கைக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.