அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று ட்விட்டரில் எலான் மஸ்க் வாக்கெடுப்பை நடத்துகிறார்.
ட்விட்டர் நிறுவனம் கைமாறியதில் இருந்து அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் என எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் எலான் மஸ்க் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தான்.
ஒரு கருத்துக் கணிப்பில் ட்விட்டரின் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரை நானே வாங்குவேன் என்று அறிவித்து இப்போது அதன் உரிமையாளரும் ஆகிவிட்டார் எலான் மஸ்க்.
ட்விட்டர் எலான் மஸ்கின் கையில் சென்றதுமே ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் ட்விட்டரில் எலான் மஸ்க் ஒரு வாக்கெடுப்பை பகிர்ந்தார். அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ர்மபை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று வினவியிருந்தார். இந்த வாக்கெடுப்பில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வாக்களித்துள்ள நிலையில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஆம் சேர்க்கலாம் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் ட்ரம்ப் மீதான ட்விட்டர் தடை நீங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மார்க் ஜுக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் ட்ரம்ப் மீதான பேஸ்புக் தடை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.