இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது அணி எவ்வாறு உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றது என தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இதனையடுத்து பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான t20 தொடர் நாளை ஆரம்பமாக இருக்கின்றது.
இதையடுத்து 20 ஓவர் உலகக்கோப்பை குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா , “இந்த தொடருக்கு இந்திய அணி பெரிய அளவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய எண்ணம் எல்லாம், ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பது தான். 50 ரன்கள் வரை விக்கெட் விழாமல் விளையாடிவிட்டால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களும் அதே ஆட்டத்தை தொடர்வார்கள்.
ஒருவேளை விக்கெட் விழுந்துவிட்டால், பின்வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.ஆசிய கோப்பையில் எங்களது பேட்டிங் பாணியை பார்த்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் 170 ரன்கள் எடுத்துள்ளோம்.
அதாவது, இலங்கைக்கு எதிரான அந்த ஒரு போட்டியை தவிர கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் ஆட்டத்தையும் நீங்கள் பார்த்தீர்கள். கடைசி ஓவர் வரை சென்றது. அதனால் அந்த போட்டியில் கிடைத்த முடிவு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றார் ரோஹித் சர்மா.