இந்திய அணி சமீபத்தில் T20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்தது. இதிலிருந்தே பல சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றன.. இந்திய அணியில் இவரை ஏன் எடுத்தீர்கள், அவரை ஏன் எடுக்கவில்லை என இதுபோன்ற ஆயிரக்கணக்கான விவாதங்கள் வந்தன. ரசிகர்கள் சிலர் இந்திய அணி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்திய அணியில் கேரளாவை சேர்ந்த பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என அனைவராலும் கருதப்பட்டது. ஆனால், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரின் இடத்தில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர் பட்டியலில் கூட சாம்சன் பெயர் இடம்பெறவில்லை.
எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வரும் ஷ்ரேயஸ் ஐயருக்கு கூட ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும் எனக் கூறி அவரது ரசிகர்கள் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த போராட்டம் வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது மைதானத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்போட்டியில் போது பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகின்றது.