காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாள்தோறும் அரசு பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரத்தில் இருந்து மாகரல் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஏறிக்கொண்டு பயணம் செய்துள்ளனர்.
அதில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்றவாறு சென்ற நிலையில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பள்ளி மாணவர்களை பேருந்தில் உள்ளே ஏறி வர சொல்லி உள்ளனர். இதனை ஏற்காத மாணவர்கள் சிலர் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரையும் நடத்துமுறையும் தரக்குறைவாக பேசி உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும், அரசுப் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு பள்ளி மாணவர்களின் இத்தகைய செயலை கண்டித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்ட ஏராளமான பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும், சமாதானப்படுத்த வந்த நிலையில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தங்களின் நிலைமை குறித்து அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அரசு பேருந்தை ஓட்டுனரும் நடத்துனரும் மீண்டும் இயக்கி சென்றனர்.