பண மோசடி வழக்கு தொடர்பாக சிவ சேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ‘சஞ்சய் ராவத்’ அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு . சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதி கோரினர்.
ஆனால் நீதிமன்றம் 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 4 ம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே அனுமதி அளித்தார். முன்னதாக, பத்ரா சால் நில மோசடி தொடர்பாகவும், அதில் பண மோசடி நடந்திருப்பது தொடர்பாகவும் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும் , விசாரணைக்கு ஆஜராகாத சஞ்சய் ராவத், நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கால அவகாசம் கேட்டுருந்தார் .
இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை இயக்குனரகம், சஞ்சய் ராவத்தை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. இதையடுத்து சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.