Skygain News

பிரபல நடிகை மீது போலீசில் புகார் கொடுத்த சினேகன்..! முழு விவரம் இதோ…

தனது அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வரும் நடிகையின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சினிமா பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் பிரபல நடிகை மீது புகார் கொடுத்துள்ளார் .

சினேகன் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி என்பர் இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதாகவும் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன் கூறியதாவது : “நான் கடந்த 2015 ஆம் ஆண்டு முறை படி பதிவு செய்து “சினேகம் பவுண்டேஷன்” என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதன் மூலம் எண்ணற்றோருக்கு நற்செயல்கள் செய்து வருகிறேன்.

சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் நடிகை ஜெயலட்சுமி என்பவர் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். பின்னர் சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர் .

இந்த சம்பவம் குறித்து நான் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய ” சினேகன் பவுண்டேஷன்” என்ற பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறக்கட்டளை என்ற பெயரில் பொது மக்களிடம் பணம் வாங்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை. மேலும் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை சென்று ஆய்வு செய்தபோது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இயங்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய மகள் பெயரில் வங்கி கணக்குகளை இணையதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து முறைப்படி விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கோ தன்னுடைய பெயருக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.