புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கல்வியில் ஏற்பட்ட போட்டி காரணமாக தனியார் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, மருத்துவர்களும், போலீசாரும் அலட்சியம் காட்டியதால்தான் மாணவன் உயிரிழந்தான் என்றும், எனவே மருத்துவர்கள் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவின்படி காரைக்கால் மருத்துவமனையில் பணியாற்றிய விஜயகுமார்,பாலாஜி ஆகிய இரு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.