மருத்துவர்களின் மெத்தனத்தாலும் அலட்சியத்தாலும்,தவறாக கொடுக்கப்பட்ட சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியாவின் மரணம் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனையின் சிகிச்சை குறித்து மிகப்பெரிய சந்தேகம் அரணாக எழும்பி நிற்கிறது . இந்நிலையில், தங்களது கல்லூரி மாணவியின் திடீர் மரணத்துக்கு இன்று காலை ராணி மேரி கல்லூரி மாணவிகள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.
ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வந்த பிரியா சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். கால்பந்து வீராங்கனையான இவருக்கு, கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக வலியால் துடித்த அவர் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே கால் பெரிய அளவு வீங்கிப்போனது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதால், உடனடியாக அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.