ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-ஆவது சுதந்திர தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செய்துகொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில், வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தங்கள் இல்லங்களில் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவரும் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் , அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படத்திற்கு பதிலாக மோடியின் அன்பு கட்டளையை ஏற்று தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றியுள்ளார்.