தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர் ஷங்கர். அவரின் உதவியாளராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரானவர் அட்லீ. குருவின் பாதையில் பயணிக்கும் அட்லீ அவரைப்போலவே தன் படங்களையும் மிகப்பிரமாண்டமாக எடுத்து வருகின்றார்.
முதல் படமான ராஜா ராணி படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற அட்லீ அடுத்ததாக விஜய்யின் தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யின் படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் பார்வையும் அட்லீயின் மேல் தான் இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான தெறி மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
தெறி படத்தின் வெற்றியினால் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யுடன் சேர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அட்லீயின் படங்கள் ரசிகர்களை ஈர்த்தாலும் சில விமர்சனங்களும் அவர் மேல் வைக்கப்பட்டன. அவரின் படங்களின் கதைகள் மற்ற படங்களின் சாயலில் இருக்கும் என்ற விமர்சனம் அவரின் மீது வைக்கப்பட்டு வருகின்றது.
இருந்தாலும் வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து அட்லீ தன் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் தற்போது அட்லீ பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கிவருகிறார் அட்லீ. என்னதான் ஜவான் பாலிவுட் படமாக இருந்தாலும் நயன்தாரா, யோகிபாபு என இப்படத்தில் தமிழ் கலைஞர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அட்லீயை தமிழ் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதாவது அட்லீ நினைத்திருந்தால் ஜவான் படத்தை வெளியூர்களிலோ, மும்பையிலோ படமாக்கி இருக்கலாம்.ஆனால் அவர் சென்னையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பை நடத்தி தமிழ் சினிமாவின் யூனியனை சார்ந்த பலருக்கு ஜவான் படத்தில் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.
எனவே அட்லீயின் இந்த செயலால் தமிழ் சினிமாவை சார்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது