திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் வெங்கடேஸ்வரா நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலை 9 மணி அளவில் ஆலையில் உள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஆலையில் இருந்து அலறி அடித்து ஓடினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்,கரும்புகையுடன் வாணுயற பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணி 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே சேத விபரங்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளார். தனியார் ஆலையில் பாய்லர் வெடித்து விபத்திற்குள்ளானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.