சோமாலியா நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கள் அந்நாட்டு ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது . இதன் மூலம் அரசை கவிழ்க்கும் சதி முயற்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை பொறுத்தவரை நாட்டின் பெரும்பாலான பகுதியை பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த அரக்க கும்பல் அரசுக்கு எதிராக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை ஈவிரக்கமின்றி நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வரும் சோமாலியா ராணுவம் போராளி குழுக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மெல்ல மெல்ல மீட்டெடுத்து வருகிறது.
அந்த வகையில் சோமாலியாவின் மத்திய கல்காடுட் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த கயிப் நகரை நீண்ட போராட்டத்துக்கு பின் ராணுவம் கடந்த வாரம் மீட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நகரில் இருந்து பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் கயிப் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
முதலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்களை ராணுவ தளத்தின் நுழைவாயில் மீது மோதி வெடிக்க செய்தனர்.
வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்து போனது . அதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டை பல மணி நேரத்துக்கு நீடித்தது. இறுதியில் ராணுவ தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 20 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தாக்குதலில் 37 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ராணுவ ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.