பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதனை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்த காவல்துறையினர் தடை விதித்தும் அந்த தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய பிறகும், பேரவைத்தலைவர் அறிவிக்க மறுப்பதாக தெரிவித்தார்.
அதிமுக நடத்திய பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் தடை ஆணையை நீதிமன்றம் வழங்கவில்லை. இதனால் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பே தற்போது வரை நடைமுறையில் உள்ளது என விளக்கமளித்தார்.
நடைமுறையில் உள்ள தீர்ப்பை சபாநாயகர் ஏற்க மறுப்பதாகவும், தங்களை வெளியேற்றிய பிறகு அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசுவதாக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவித்திருப்பதும் கண்டனத்திற்குரியது என்றார். தங்களை வெளியேற்றிய செயல் திட்டமிட்டு அரங்கேறியதாகவும், அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் திமுக இவ்வாறு செயல்படுவதாகவும் கடுமையாக சாடினார். மேலும் பேரவை கூட்டம் நேற்று முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணிநேரம் பேசியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.