மருத்துவர்களின் முறையற்ற தவறான அறுவை சிகிச்சையினால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது பிரியாவின் பெற்றோருக்கு வீடு வழங்கும் ஆணையும், 10 லட்சம் ரூபாய் நிவாரணத்திற்கான காசோலையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா ஒரு துடிப்பான கால்பந்து வீராங்கனை. தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற லட்சகியதோடு இரவு பகல் பாராமல் பயிற்சி வந்துள்ளார் . அதில் ஒருநாள் பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் பிரியாவின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டது . இருப்பினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.

பல கனவுகளோடு மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொன்ன அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.