வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அந்த வகையில் கடலூர் மாநகராட்சி பகுதியில் வண்ணான்குட்டை, பாஷியம்ரெட்டி தெரு, வி.பி.ஆர். நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன் மற்றும் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி மேயர் ஆகியோர் உடன் இருந்தனர் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 27 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக உள்ளது. மேலும் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் 3 நாட்கள் தொடர் மழை பெய்தும், பெரும் அளவில் மழை நீர் தேங்கவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 243 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கும் வகையில் 750 டன் அரிசி மாவட்டத்தில் உள்ள 278 ரேஷன் கடைகள் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் வகையில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.