கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (65) இவரது மனைவி திம்மக்கா, இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசப்பா விவசாய தொழில் செய்து வந்தார். தனது வீட்டில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வெங்கடேசப்பா தனக்கு சொந்தமான ஆடுகளை மரக்கட்டா கிராம வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியிலிருந்து வந்த காட்டுயானை ஒன்று விவசாயி வெங்கடேசப்பாவை துரத்தி சென்று கால்களால் மிதித்து தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரது உடலை எடுத்து வந்து நடுரோட்டில் வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர். பின்னர் உயிரிழந்த வெங்கடேசப்பா உடலை ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.