குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் உள்ள 19 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும். பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். இதற்காக பிரதமர் மோடி நேற்று காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள தனது தாய் ஹீரோபென் மோடி வீட்டுக்கு பிரதமர் சென்றார். மோடி தனது தாயை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். சுமார் 45 நிமிடங்கள் பிரதமர் மோடி தனது தாயுடன் இருந்தார். பின் அங்கியிருந்து பா.ஜ.க. அலுவலகத்துக்கு சென்று விட்டார்.

பிரதமர் மோடியை தவிர்த்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பூபேந்திர பாய் படேல், முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.