தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி, மற்றும் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் ஆகாயத் தாமரையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது.
பயிற்சி நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களை பாராட்டி அவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
நீர் ஆதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆகாயத் தாமரையினை அகற்றிடும் விதமாகவும் கழிவுப் பொருளான ஆகாயத் தாமரையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தைச் சேர்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனர் பீனா வாயிலாக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதமாக மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

பயிற்சியின் போது அவர்கள் ஆகாய தாமரையில் இருந்து கூடை, தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கலை நயத்துடன் செய்து அசத்தி உள்ளனர். இதனை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்தகட்டமாக எடுக்க உள்ளோம் எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களுக்கு ஆகாய தாமரை மூலம் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது என்றார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.