அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது : இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா. இவர் கால்பந்து வீராங்கனை பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, பின்னர் உயிரை காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். முறையற்ற தவறான சிகிச்சையினால் பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.