ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கடையில் மூட்டை மூட்டையாக குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கல்லாகட்டிய வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தியூர் – பிரம்மதேசம் பிரிவு கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சரியான நேரத்தில் சோதனை மேற்கொண்ட காரணத்தால் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கட்டு கட்டாக பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்வரன் என்பவர், கடையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதிஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 7 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .