உலகை உலுக்கிய கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளை படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் கொரோனா கொடுந்தொற்றால் பலர் தங்களது இன்னுயிர்களை இழந்துள்ளனர்.

அந்தவகையில் இந்த கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இதையடுத்து தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பயிலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறக்கத்திருக்கிறது.

இதுகுறித்து சமூக நலத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறிருப்பதாவது :
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டிருப்பின், அவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் கல்வியை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான கருத்துருவை, தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பிவிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து பள்ளிகளும் கருத்துருவை அனுப்பியதை உறுதிப்படுத்தவும் , அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.